வரலாறு : வனவாசமும் வாழ்க்கையின் அவசியமே என உலகிற்கு உணர்த்திட இறைவன் தன் தேவியுடன், வனப்பிரதேசமாக விளங்கிய இப்புராதனவனத்தில் தங்கி, தேவர்களும், சித்தர்களும், துறவிகளும் சூழ வந்தமர்ந்தார்.

இத்தலத்தில் சிவபெருமான் நீண்ட கால நிஷ்டையில் அமர்ந்தார். இதனால் உலகில் அசுரர் பலம் மிகுந்ததால், தேவர்களும், ரிஷிகளும் அசுரர்களின் செயல்கண்டு துன்பம் அடைந்தனர். எல்லோரும் ஒரு சேர தேவியிடம் முறையிட்டனர். தேவியரோ மன்மதனை அழைத்து சிவனின் தவத்தை கலைக்கலாம் என்றாள்.

உலக நன்மைக்காக மன்மதனும் மலர்க்கணைகளை பூவானமாக தொடுத்து எய்தான். அவன் நின்று மலர்களை எய்த இடம் "பூவனம்' என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

மலர்க்கணையால் நிஷ்டை கலைந்த முக்கண்ணன், மலர்க்கணை வந்த திசை நோக்க, மன்மதன் வெப்பசக்தியால் தகித்தான். இந்த இடம் "மதன்பட்டவூர்' என்று ஆயிற்று.

நிஷ்டை கலைய நாங்களே காரணமென்றும், மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டுமென தேவர்களும், ரிஷிகளும் கேட்டுக் கொண்டனர். மன்மதன் பால் தெளித்து உயிர்ப்பிக்கப்பட்டான். இந்த இடம் பாலத்தளி என்று விளங்குகிறது.

இத்தலத்தில் காமனை எரித்ததற்கு சான்றாக "காமன் கொட்டல்' என்ற இடத்தில் காமன் பண்டிகை விழா நடக்கிறது.

கிராமம்/நகரம் திருச்சிற்றம்பலம்
மாவட்டம் தஞ்சாவூர்