கல்வெட்டு:

இவ்வூர்க் கோயிலில் சோழ மன்னர்களில் மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன், இராஜகேசரிவர்மன், இராஜேந்திர சோழ தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜேந்திர சோழதேவன் இவர்கள் காலங்களிலும்; பாண்டியர்களில் வரகுண மகாராசன், வல்லப தேவனாகிய தெய்வ வீர பாண்டியன், மாறவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவன் இவர்கள் காலங்களிலும்; விசயநகர வேந்தர்களில் வேங்கட பதி ராயர் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக் கின்றன.

இக்கோயிலில் உள்ள மதுரைகொண்ட கோப்பரகேரி வர்மர், வரகுணமகாராசர், முதலானோர் கல்வெட்டுக்களில் இவ்வூரின் பெயர் திருச்சிற்றேமம் என்றும், சகம் 1381 அதாவது கி. பி. 1459 இல் ஏற்பட்ட கல்வெட்டில் இவ்வூரின் பெயர் திருச்சிற்றம்பலம் என்றும்; இறைவரின் திருப்பெயர் திருச்சிற்றேமத்து மகாதேவர், திருச்சிற்றேம முடையார், பழையவனத் தம்பிரானார், பழையவனப்பெருமாள் எனவும் கூறப்பெற்றுள்ளன. இங்குக் குறித்த இறைவரின் திருப்பெயர் களுள் பழையவனப் பெருமாள் என்பது மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்துக் கல்வெட்டிலும், பழையவனத் தம்பிரானார் என்பது வேங்கடபதிராயர் காலத்துக் கல்வெட்டிலும் குறிக்கப் பெற்றுள்ளன. இவ்வூர், இராஜராஜ வளநாட்டு, வெட்டாறுநாட்டுப் புன்றிற் கூற்றத்துக்கு உட்பட்டிருந்தது.

அம்மன் கோயில் மண்டபத்துத் தூண் ஒன்றில் உள்ள கல்வெட்டு, அத்தூண் முத்தன்ராமனாகிய முடியாள் புரியாரால் கொடுக்கப்பட்டது. என்பதைத் தெரிவிக்கின்றது. வீரபாண்டிய தேவரும், இத்தியூர்ச் சபையாரும், பிறரும் சிவபெருமானுக்கு நிலநிவந்தங்கள் அளித்திருந்தனர். இவ்வூர்க்குளத்திற்குத் தண்ணீர் வர, திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ தேவர்காலத்தில் ஒரு வாய்க்கால் வெட்டப்பெற்றது.